Friday, September 28, 2012

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்


 சதுரகிரி

Sathuragiri

பதினெட்டு சித்தர்கள், கோடான கோடி தேவர்கள் குடியிருக்கும் மூலிகை வனமான சதுரகிரி மலை, ஆன்மிக தேடலில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான இடமாகும். முதலில், சதுரகிரி மலையேற மனதில் பக்தியும், உடலில் தெம்பும் அவசியம். வாருங்கள் சிவனோடு சித்தர்களையும் நாம் தரிசித்துவிட்டு வருவோம்.



இருப்பிடம்

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள,  கிருஷ்ணன்கோவில் பிரிவிலிருந்து வத்திராயிருப்பு(7கி.மீ.)  சென்று, அங்கிருந்து தாணிப்பாறை எனப்படும் சதுரகிரி மலை அடிவாரத்திற்கு பஸ் அல்லது ஆட்டோவில் (2கி.மீ.,) செல்ல வேண்டும். இங்கிருந்து மலையேற வேண்டும்.
இடையில் தென்படும் நீர்வீழ்ச்சி
 

 மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

கோரக்கசித்தர் தவம் செய்த குகை


இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.

இரட்டைலிங்கம்

 இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று (நாவல் மரத்தடியில் இருப்பதால்) வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை(பாறையே வெண்மையாக மண்ணானது பார்ப்பதற்க்கு பச்சரிசி மாதிரி இருக்கும்), வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
நாம் மலை ஏறும்போது ஆங்காங்கே பல நாயகள் தென்படும். அவற்றுள் பல நம்முடனேயே வரும். இது பக்தர்களின் காவலுக்காக பைரவன் நாய் உருவில் வருவதாக ஐதீகம். மலைப்பகுதியிலுள்ள நாய்களால் நமக்கு எந்த தொல்லையும் ஏற்படுவதில்லை.





 
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் வரலாறு

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.


சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.


சுந்தரமகாலிங்கம்
சுந்தரமூர்தி லிங்கத்தை தரிசித்தபின் சிறிது தூரம் நடந்தால் வருவதுதான் சுந்தரமகாலிங்கம். இவர்தான் ஹீரோ. சுந்தரமகாலிங்கம் சற்று சாய்வாக அமைந்திருக்கும்.
சுந்தரமகாலிங்கம்

 

லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.


 

சந்தன மகாலிங்கம்

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
 

மகாலிங்கம்

மகாலிங்கம்

மகாலிங்கம் தரிசிக்க சுந்தரர் கோவிலில் இருந்து மலைப்பதை வழியாக சுமார் 3 கிலோமீட்டர் கரடுமுரடான பாதைஇல் நடந்து செல்லவேண்டும். காட்டு பாதை என்பதால் அனேகமானோர் செல்வதில்லை. வழிகாட்டி ஒருவருடன் செல்வதுதான் பாதுகாப்பு. மலை சென்று திரும்பியவுடன் நமது உடலுக்கு ஒரு புதுத் தெம்பு கிடைத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
இந்த மூலிகை வணத்திற்க்கு வருடத்திற்க்கு ஒருமுறையேனும் சென்று நமது உடலை சார்ஜ் செய்துகொள்ளலாம். 

தவசிக்குகை

தவசிப்பாறை

மகாலிங்கத்தின் அருகில் இருப்பதுதான் தவசிப்பாறை என்கிற தவசிக்குகை. இந்த குகைக்கு படுத்து, தவழ்ந்துதான் செல்ல முடியும். சித்தர்கள் தவம் செய்த இடம். குகையின் உள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது. இங்கேயும் வழிகாட்டியுடன் செல்வது நல்லது.

மகாலிங்கத்திலிருந்து சுந்தர மகாலிங்க கோவில் 
 இறைவனை தரிசித்த பரவசத்துடன் மலையில் இருந்து இறங்கலாம். ஓம் நமசிவாய. 


 

Thursday, August 16, 2012

அருள்மிகு தம்பிக்களை ஐயன் சுவாமி திருக்கோவில்.


அருள்மிகு தம்பிக்களை ஐயன் சுவாமி திருக்கோவில்.

( ராகு கேது பரிகாரத்தலம் )

            ராஜகோபுரம்


படங் கொண்ட சர்ப்பங்கள் நடமாடும் திருக்கோயில்
விடமான தீவினைகள் விலகிவிடும் திருக்கோயில்
திருநீற்றின் நெறி விளங்க திருவருளின்  புகழ் விளங்க
வருவோர்க்கு வாழ்வளித்து வளம்கூட்டும் திருக்கோயில்
எல்லோர்க்கும் அருள்வழங்கி ஏற்றம் தரும் திருக்கோயில்
சிவசித்தன் ஸ்ரீ தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலே.

தல வரலாறு

ஒரு காலத்தில் தம்பி கவுண்டர் என்ற மிகப் பெரிய ஜமீந்தார் அங்கு இருந்தார். அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்பதற்கு அவருடைய சகோதரர் நல்லாயன் என்பவர் அழைத்துச் செல்வார். ஒரு நாள் அந்த கால் நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லாயன் கண்டார்.அடுத்த நாள் அதை கண்காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு பாம்பு புற்றின் மீது நின்று கொண்டது. அதில் இருந்த நாகப் பாம்பு அதன் பாலை குடித்துக் கொண்டு இருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லாயன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவனை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி மறுநாள் அனைவரும் தம்பி கவுண்டரின் தம்பியான நல்லாயனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர். அங்கு நடந்த காட்சியைக் கண்டு பிரமித்தனர். தம்பி கவுண்டர் அநியாயமாக தனது தம்பியை அடித்து விட்டேனே என வருந்தினார். அவரை மற்ற உறவினர் தேற்றினார்கள். அன்று இரவு தம்பி கவுண்டரின் கனவில் அந்த பாம்பு தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அப்படி செய்தால் அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாக உறுதி கூறியது. ஆகவே அன்றுஇரவே தம்பி கவுண்டர் அந்த புற்றின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து வெளிவர மறுத்தார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
அவரை கேலி பேசிய ஒரு மலையாள மந்திரவாதி அவர் சிஷ்யரானார். அது போல ஒரிஸ்ஸாவை ஆண்டு வந்த விஜய கர்ணா என்ற மன்னன் அவர் சிஷ்யரானார். ஒரிஸ்ஸாவில் இருந்து ஒரு வணிகர் தன்னுடைய பேச முடியாத மகளை அங்கு அழைத்து வர அவள் பேசத் துவங்கினாள். அவந்தியில் இருந்து வந்த ஒரு பிராமணக் குருடனுக்கு கண் பார்வை தந்தார். பல காலம் பொறுத்து தம்பி கவுண்டர் இறந்து போக அவரை தெய்வமாகக் கருதி அவரை தம்பி கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர்.
ஆலயத்தில் தம்பி கலை ஐயன் வடக்கு நோக்கிப் பார்த்தபடி தவக்கோலத்தில்அருள்பாலிக்கிறார். சிவன் ஆலயத்தில் உள்ளது போல் சித்தருக்கு எதிரில் நந்தி சிலை அமைந்துள்ளது.   

நாகேஸ்வரி அம்மன்
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென் கிழக்கு பகுதியில் கிழக்huகு நோக்கி நாகேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது பாம்பு புற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் பல பாம்புகள் சுற்றித் திரிகின்றன . ஆனால் அவை எவரையும் பயமுறுத்துவதில்லை. அங்கு உள்ள பாம்புகளின் எதிரிகளான மயில்கள் கூட பாம்புகளை ஒன்றும் செய்வது இல்லை.
தோல் நோய் குணமடய
நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் பின் புறம் நாகலிங்க ஆலயம் உள்ளது.
இங்கு தண்ணீரில் திருநீர் தெளித்து வேப்பிலையால் மந்திரித்து அதன் அபிஷேக நீரை பருகினால் தோல் வியாதிகள் குணமாகி விடுமாம்.
அது போல பாம்பு கடித்து விட்டவர்களை அங்கு கொண்டு வந்து தம்பி கலை ஐயன் எதிரில் வைக்க அவர்கள் குணமடைகின்றார்களாம் .
மணமாகாதவர்கள் நாகேஸ்வரியை வந்து வேண்டிக் கொள்ள திருமணம் ஆகுமாம். தம்பி கலை ஐயன் ஆலயத்தின் வெளிப்புறத்தில் அவர் தம்பி நல்லாயனுக்கும் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு பசு பாம்புக்கு பால் வார்ப்பது போன்ற சிலை உள்ளது. பாம்பாட்டி சித்தர், கணபதி, சங்கர நாராயணன், சிவன், விஷ்ணு, திருமூலர் மற்றும் கருப்பண்ணச்சாமிக்கும் ஆலயங்கள் உள்ளன.


ராகு கேது
கோவிலின் உள் பிராகாரத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு ராகு கேது பெயர்ச்சி சமயத்தின்போது சிறப்பு மகா யாகம் நடைபெறுகிறது.

இங்கே சில வித்தியாசமான செம்மறி ஆடு சிலை 5 கால்களுடன் உள்ளது.
அதே போல் உயிருடன் சில ஆடுகளும் திரிகின்றன.

          

வித்தியாசமான செம்மறி ஆடு சிலை

கழுத்தில் ஒரு காலுடன் ஆடு

 



திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் முன் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்த  ஆலயத்தில் திருவிழா நடைபெறும். விழாவின் ஆரம்பத்தில் உற்சவர் சிலைகளை பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரும் நீரால் முதல் நாள் அபிஷேகம் செய்கின்றனர். அடுத்த ஆறு நாட்களும் பொங்கல் படைகப்படுகின்றது. கருப்பச்சாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகின்றது..


அமைவிடம்
ஈரோடு to சத்யமங்கலம் செல்லும் பாதையில் (கவுந்தப்பாடிக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாகவே) ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு கிராமம்.
பெருந்துறை to கவுந்தப்பாடி வழியாகவும் இக் கோவிலுக்கு செல்லலாம்.
ஈரோடு மாவட்டம் வந்தால் ஒரு முறை நாமும் இந்த சித்தர் சன்னதிக்கு சென்றுவரலாமே.....